விளையாட்டு செய்திகள்

மாநில பள்ளி, கல்லூரி கைப்பந்து: வேலுடையார், பி.கே.ஆர். அணிகள் வெற்றி

25 Jan 2023

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி மற்றும் கல்லூரிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

வருகிற 27-ந் தேதி வரை நடக்கும் இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடக்கிறது. 2-வது நாளான நேற்று நடந்த பள்ளி அணிகளுக்கான ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்டர்ஸ் (சென்னை) அணி 25-17, 25-10 என்ற நேர்செட்டில் மான்போர்ட்டை (ஆலந்தூர்) தோற்கடித்தது.

மற்ற ஆட்டங்களில் ஜி.எஸ்.சிந்து (ஸ்ரீவில்லிபுத்தூர்), வேலுடையார் (திருவாரூர்), ஆக்ஸ்போர்டு (நாமக்கல்), நாடார் மேல்நிலைப்பள்ளி (ராஜபாளையம்), டான்போஸ்கோ (சென்னை), செயின்ட் பீட்ஸ் (சென்னை), கலைமகள் (மயிலாடுதுறை) அணிகள் வெற்றி பெற்றன. இதன் பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கலைமகள் அணி (மயிலாடுதுறை) 25-2, 25-2 என்ற நேர்செட்டில் ஜி.எச்.எஸ். (ஆவடி) அணியை ஊதித் தள்ளியது.

மற்ற ஆட்டங்களில் ரோல்டர் (சென்னை), காத்ரியா, குமுதா (சென்னை), ஆக்ஸ்போர்டு (நாமக்கல்), பென்டிக் (சென்னை), லேடி சிவசாமி (சென்னை) அணிகள் வெற்றியை தனதாக்கின.

கல்லூரி அணிகளுக்கான ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.சி. (பொள்ளாச்சி) அணி 25-15, 25-23 என்ற நேர்செட்டில் பாரத் ஐ.எஸ்.டி. (சென்னை) அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் கற்பகம் அகாடமி (கோவை), சத்யபாமா (சென்னை), குருநானக் (சென்னை) அணிகள் வெற்றி கண்டன. இதன் பெண்கள் பிரிவில் ஆட்டம் ஒன்றில் பி.கே.ஆர். (கோபிசெட்டிபாளையம்) அணி 25-15, 25-6 என்ற நேர்செட்டில் அமெரிக்கன் கல்லூரியை (மதுரை) சாய்த்தது. மற்ற ஆட்டங்களில் சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம்., எம்.ஓ.பி.வைஷ்ணவா, எத்திராஜ் அணிகள் வெற்றி பெற்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam