இந்தியா செய்திகள்

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்

11 Jul 2018

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. மாநிலங்களவையில் இப்போது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது, இம்மொழிகளுக்கு பிரத்யேகமாக மொழிபெயர்ப்பாளர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

மாநிலங்களவையில் இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஒடியா, அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, மராத்தி, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் உள்ளது. இம்மொழிகளை தாய் மொழியாக கொண்ட உறுப்பினர்கள், தங்கள் கருத்துகளை தங்கு தடையின்றி தங்களுடைய மொழியிலே முன்வைத்து வருகிறார்கள். இருப்பினும் மேலும்,  10 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. இதனை களைவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது அதனை சரிசெய்யும் விதமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகிய 5 மொழிகளையும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதி  செய்யப்பட்டுள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோன்று,  போடோ, மைதிலி, மராத்தி, நேபாளி, மணிப்பூரி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதனால் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பேசுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

மாநிலங்களவை சபாநாயகராக வெங்கையா நாயுடு தேர்வான பின்னர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வெங்கையா நாயுடு பேசுகையில், “ நம்முடைய முழு உணர்வு மற்றும் எண்ணங்கள் விடுபடாமல் தெரிவிப்பதற்கு தாய்மொழியே, இயற்கையான மிடியம் என்று நான் எப்போதும் உணர்கிறேன். அதனால்தான் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பிரத்யேகமாக மொழிபெயர்ப்பாளர்களை அமைக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன். இப்போதைய மழைக்கால கூட்டத்தொடரின் போதே இது நடைமுறைக்கு வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,” என கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்