இந்தியா செய்திகள்

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

17 Jul 2017

 

பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31–ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை இரண்டு கட்டங்களாக நடந்தது. இதையடுத்து சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பை அறிமுகம் செய்வதற்காக பாராளுமன்றம் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி நள்ளிரவில் கூடியது. திட்டமிட்டபடி நள்ளிரவு 12.01 மணிக்கு (ஜூலை 1–ந்தேதி) ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11–ந்தேதி வரை 20 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு திடீர் ஆதரவு தெரிவித்த சில எதிர்க்கட்சிகள், துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதாலும், காங்கிரஸ் தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்து இருப்பதன் காரணமாகவும் இந்த கூட்டத் தொடரில் காரசார விவாதங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் சிலரை அடித்துக் கொன்ற விவகாரம், காஷ்மீர் பிரச்சினை, சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையில் நிலவும் பதற்றம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம், மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் கிளர்ச்சி, கூர்க்காலாந்து தனி மாநில போராட்டம், பிரதமரின் முதல் இஸ்ரேல் பயணம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்பதால் பாராளுமன்றத்தில் வழக்கம்போல் அமளி, கூச்சல் குழப்பத்துக்கு பஞ்சமிருக்காது.

அதே நேரம் எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளும் பா.ஜனதா தயாராகவே உள்ளது.

இதுபற்றி பாராளுமன்ற விவகார மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நடப்பு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று வற்புறுத்தினால், அதுபற்றி அவை நடவடிக்கை குழுவிடம் பேசப்படும். அதன்பின்னர் சபைத்தலைவர் விவாதத்துக்குரிய தேதி, நேரம் பற்றி முடிவு செய்வார்’’ என்றார்.

இந்த தொடரில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன சட்டதிருத்தம், அசையா சொத்துகள் ஒழுங்குமுறை மற்றும் கையகப்படுத்தும் சட்டதிருத்தம், குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டதிருத்தம், மோட்டார் வாகன சட்டதிருத்தம் உள்ளிட்ட 20 சட்ட மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

டெல்லி மேல்–சபையில் நிலுவையில் உள்ள ஊழலுக்கு எதிராக குரல்கொடுப்போரை பாதுகாக்கும் சட்டத்தை பரிசீலனைக்கு வைத்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, அண்மையில் மறைந்த மத்திய மந்திரி அனில் மாதவ் தவே, பா.ஜனதா எம்.பி. வினோத்கன்னா காங்கிரஸ் எம்.பி. பல்வை கோவர்த்தன் ரெட்டி ஆகியோரின் மறைவுக்கு இரு அவைகளிலும் எம்.பி.க்கள் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதையடுத்து இன்றைய கூட்டம், நடவடிக்கைகள் எதுவும் இன்றி ஒத்தி வைக்கப்படும். நாளை முதல் வழக்கம்போல் சபை நடவடிக்கைகள் நடைபெறும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV