இலங்கை செய்திகள்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து விபத்துக்குள்ளான யாழ். யுவதிகள்

16 May 2018

 மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான இரு பெண்களில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.இருபாலைச் சந்திப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தனர். அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேறியதுடன் அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்களும் 23, 24 வயதுகளையுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேரந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV