வரலாறு செய்திகள்

மடமையைக் கொளுத்தும் மடந்தையர்

07 Mar 2021



'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்'

'அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்'


முறுக்கிய மீசையும் முன்பின் சறுக்காத வார்த்தையும் கொண்ட முண்டாசுக்கவிஞன் செப்பிய வார்த்தைகள் இவை. புரட்சிக் கவிஞன் தான் வாழ்ந்த சமூகச் சூழலில் காணவிழைந்த புதுமைப் பெண் பற்றிய இவ்வரிகள், இன்றும் ஏற்புடையதாகவே இருக்கின் றன. அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8ல் கடைப்பிடிக்கப்படுகிறது. 2021ல் பெண்கள் நாள் மகுட வாக்கிய மாக Women Rising! Educate, Enlighten, Empower எனக்கொள்ளப்பட்டிருக்கிறது. 'கல்வியூட்டி, அறிவொளியேற்றி, வலுவூட்டு வோம். பெண்கள் மேலெழுகிறார்கள்'.

பெண்களின் உரிமையென்பது மனித உரிமையே. நெருக்குவாரங்களோ, பாகுபாடு காட்டுதலோ அற்ற உடல், உள ஆரோக்கியத்தை மிக உயர்ந்த தரத்தில் பேணவும், விரும்பிய கல்வியைக் கற்கவும், ஆதனங்களைச் சொந்தமாக வைத்திருக்கவும், வாக்குரிமையை விரும்பியவாறு பிரயோகிக்கவும், சமமான ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமையே இது. உலகம் முழுமையிலும் பெண் களும் சிறுமிகளும் பாலியல், பாலின அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர். இப்பாலின சமத்துவமின்மை வாழ்விட பாலியல் வன்முறை, குறைவான ஊதியம், கல்வி பெறுவதற்கான வசதியின்மை, போதிய சுகாதார பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை ஆண்களும் பெண்களும் சமத்துவமானவர்கள் என்ற தனது கொள்கை ரீதியான அனைத்துலக உடன்பாட்டினை 1945ல் உறுதிப்படுத்தியது. 1967ல் ஐக்கிய நாடுகள் ஒன் றிய உறுப்பு நாடுகள், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டினை ஒழிப்பதற்கான பிரகடனத்தை மேற்கொண்டன. பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டல் மனிதகுல கௌரவத்திற்கு எதிரான குற்றம் என்றும், பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களைக் கொண் டிருக்கும் தற்போதைய சட்டங்கள், பழக்க வழக்கங்கள், ஒழுங்கு முறைகளை உறுப்பு நாடுகள் கைவிடவேண்டுமெனவும் கோரியது.

மேலும், முதலாவது அனைத்துலக மகளிர் தினம் 1975 மார்ச் 8ல் உத்தியோகபூர்வமாக ஐ.நா. மன்றத்தினால் கொண்டாடப்பட்டது. நாம் வாழும் இக்கனடா நாட்டில் பெண்களின் சமத்துவத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறு சட்டக்கருவிகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. 1977ல் அறிமுகப்படுத்தப்பெற்ற மனித உரிமைகள் சட்டம் அனைத்து கனடியர்களும் வயது, பாலினம், பாலியல் நோக்குநிலை, குடும்பநிலை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லாத - சமவாய்ப்பு, சமத்துவம், நியாயமான நடத்துகை ஆகியன உள்ள சூழலைப் பெறும் பாதுகாப்பினை வலியுறுத்துகின்றது.

எது எவ்வாறு இருந்தபோதிலும், 1776 மார்ச் 31ல், Abigail Adams தனது கணவரும், அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியுமான John Adamsக்கு எழுதிய கடிதத்தில் Great Britain இடமிருந்து அமெரிக்காவின் சுதந்திரத்திற்காக போராடும்போது நாட்டிலுள்ள பெண்களை மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அன்று அமெரிக்காவின் முதற்பெண்மணியாக வரவிருந்த தருணத்தில் Abigail Adams தமது கணவருக்கு வரைந்த கடிதத்தில், புதிய சட்டவிதிகளை ஆக்கும்போது பெண்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூதாதையர்களைவிடவும் நீங்கள் அவர் களுக்கு தாராளமாகவும், சாதகமாகவும் இருக்கவேண்டும். எல்லா ஆண்களும் தங்களால் முடிந்தால் கொடுங்கோலர்களாகவே இருப்பார்கள். ஆகையால் வரையறையற்ற அதிகாரத்தை கண வர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம். பெண்களின் விடயத் தில் மிகுந்த கவனிப்பும், கவனமும் செலுத்தப்படாவிடின், நாங் கள் ஒரு கிளர்ச்சியைத் தூண்டுவதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் பிரதிநிதித்துவம் இல்லாது ஆக்கப்படும் எந்தவொரு சட்டத்திற்கும் கட்டுப்படமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் 19வது திருத்தத்தை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றுவதற்கு ஏறத் தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பாக Abigail Adams கைக்கொண்ட முயற்சிகளே பெண்களுக்கான சமவுரிமைப் போராட்டத்தின் முதற் படியாய் அமைந்தது என்கிறார்கள் கட்டுரையாளர்கள். 1762 - 1801 ஆண்டுக்காலப் பகுதியில் Abigail Adams - John Adams ஆகியோருக்கிடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் இன்னமும் Massachusetts Historical Societyல் பாதுகாக்கப்படுகின்றன என்பது மேலதிகத் தகவல்.

ஜூலை 13, 1848 பெண்கள் உரிமைகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட நாளாக குறிப்பிடப்படுகிறது. நியூயோர்க் நகரத்து அந்தக் கோடைகால நாளொன்றில், இளம் குடும்பப் பெண்ணான Elizabeth Cady Stanton தனது நான்கு பெண் நண்பர்களோடு தேநீர் உடனான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தாள். அவர்க ளின் உரையாடல் அப்போதைய பெண்களின் நிலைமை குறித்துத் திரும்பியபோது, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற புதிய சூழ் நிலையிலும் தான் ஒரு பெண் என்பதனாலேயே எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், நிர்ப்பந்தங்களையும் பற்றி தன் மனக்கிடக்கைகளை கொட்டித் தீர்த்திருந்தாள். Stanton இன் நண்பர்களும் இவரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்.

இதுதான் பெண்கள் சிறு சிறு குழுக்களாக தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய முதல் நிகழ்வல்ல. ஆயினும், இவர் கள் தான் முதன்முறையாக திட்டமிட்டு, பாரிய அளவில் முன்னெ டுத்துச் சென்றிருந்தார்கள். இந்த ஐவர் கொண்ட குழு இரண்டே நாள் அறிவித்தலோடு 'பெண்களின் சமூக, சிவில், மத நிலைமை மற்றும் உரிமைகள் பற்றி கலந்துரையாடும் மாநாடு' ஒன்றினை Seneca County Courier எனுமிடத்தில் Wesleyan Chapel மண்டபத் தில் 1848 ஜூலை 19, 20ம் திகதிகளில் மாபெரும் நிகழ்வாக நடத்தினர். மேற்கத்தைய நாகரிக வரலாற்றில் இதுபோன்றதோர் பொதுக்கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லையென NationalWomen’s History Alliance தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

கனடிய பெண்களின் வாழ்வியலில் அவர்கள் அனுபவித்த வரப் பிரசாதங்கள் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். காலனித்துவ நடைமுறை நிலைபெறுவதற்கு முன்பாக பழங்குடிப் பெண்கள் தங்கள் சமூகங்களின் முடிவெடுக்கும் விடயங்களில் பங்கெடுத்தனர். இரோகுவஸ், மொஹாக் போன்ற இனக்குழுமங்களில் சொத்துரிமை, பரம்பரையுரிமை, வாக்களிக்கும் உரிமை என்பன அச்சமூகத்தின் மூத்த பெண்களின் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1500களில், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் தோற்றம் பெறுவதற்கு முன்னர், உழைத்து வாழும் தொழிலாள வர்க்கத்தினர் தம்முடைய நுகர்வுக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்த கட்டமைப்பில், பெண்களின் பங்கு பொருளாதார அமைப்பில் கணிசமாகவிருந்தது.

1750களில், கியூபெக்கில் புடவைக்கைத்தொழில் முயற்சிகள் தொடங்கப்பட்ட வேளையில் பெண்கள் கணிசமானளவு பங்குபெற்றனர். 1791ல் சொத்து உள்ள அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியது. எனினும் 1849ல் அனைத்துக் கனடிய பெண்களும் எந்தத்தேர்தலிலும் வாக்களிக்க முடியாதெனத் தடைவிதிக்கப்பட்டனர். 1862ல், நியூபிரூன்ஸ்விக் Mount Allison பல்கலைக்கழகமே முதன்முதலில் பெண்கள் கல்வி கற்க அனுமதி வழங்கிய பெருமைக்குரியது. 1870ல் கனடிய அரசின் பொதுச்சேவையில் முதலாவது பெண் பணியாற்றத் தொடங் கினார். கிங்ஸ்டன் சிறைச்சாலையில் matron ஆகப் பதவி யேற்றிருந்தார். 1886ல், கனடிய மத்திய அரசுப் பொதுச்சேவையில் மொத்தமாக 24 பெண்களே நிரந்தர பதவி வகித்தவர்களாவார்.

1872ல், ஒன்ராறியோ மாகாண அரசு, பெண்கள் தங்கள் கணவர் களின் கட்டுப்பாடோ, தலையீடோ இன்றி பணியாற்றவும், ஊதியம் பெறவும் சட்டமூலம் அனுமதியளித்தது. 1882ல், ரொறன்ரோ வர்த் தக மற்றும் தொழிலாளர் அமைப்பு (Toronto Trades and LabourCouncil) சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்ற கோரிக் கையை (Equal pay for equal work) ஆதரித்தது. 1884ல், ஒன்ராறியோ தொழிற்சாலைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் பெண் ஊழியர்களுக்கான பல்வேறு பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் வேலைசெய்ய நிர்பந்திக்க முடியாமை, தரமான சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துதல், பணி செய்வோரின் ஆகக்குறைந்த வயதெல்லை 14 என உறுதிப்படுத்தல், சுரங்கங்களிலோ அவற்றின் சுற்றாடலிலோ பெண்கள் வேலை செய்யத்தடை போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

Clara Brett Martin என்பவரே கனடாவிலும் பிரிட்டிஷ் சாம்ராஜ் ஜியத்திலும் சட்டம் பயின்று, பணியாற்றிய முதற் பெண்மணியாவார். 1900ல், கற்பித்தல் ஒன்றே ஓய்வூதியம் பெறக்கூடிய பெண்களுக்கான தொழிலாக இருந்தது. பெண்கள் திருமணத்திற்குப் பின் வேலையிலிருந்து தாமாக விலகவேண்டுமென சட்டரீதியாக கோரப்பட்டனர். 1904ல், மொன்றியால் நகரத்தில் ஆண் தொழிற்சங்கவாதிகள், முதலாளிகள் பெண் தொழிலாளர்களை வேலையிலி ருந்து நீக்க வேண்டுமெனக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட னர். 1912ல், முதன்முறையாக கனடிய பல்கலைக்கழகம் ஒரு பெண் பேராசிரியரை பணிக்கமர்த்தியது. 1914 - 1918 முதலாம் உலகப்போரைத் தொடர்ந்து, வீட்டிற்கு வெளியே பணிசெய்யும் தனிப் பெண்கள் மீதான அணுகமுறை மிகச் சாதகமாக மாறத் தொடங்கியது.

1916ல், பெண்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை அல்பேர்ட்டா, மானிட்டோபா, சாஸ்கட்சவான் (Alberta, Manitoba, Saskatchewan) ஆகிய மாகாணங்களில் வென்றெடுத்தனர். தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியா(British Columbia), ஒன்ராறியோ(Ontario) 1917லும், நோவாஸ்கோஷியா(Nova Scotia) 1918லும், நியூ பிரான்சுவிக்(New Brunswick) 1919லும், பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட்(Prince Edward Island) 1922லும், நியூ பவுண்ட்லண்ட்(Newfoundland) 1925லும், கியூ பெக்(Quebec) 1940 லும் இவ்வுரிமையை வழங்கின. 1916ல், Emily Murphy கனடாவின் முதலாவது பெண் நீதிபதியாகப் பதவியேற்றார். 1917ல் பெண்களுக்கான ஆகக் குறைந்த வேதனத்தை முதன்முதலில் ஆல்பர்ட்டா மாகாணம் நிர்ணயித்தது. 1918ல், பழங்குடியின மற்றும் ஆசிய பெண்கள் தவிர்ந்த கனடிய பெண்கள் கனடிய கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை பெற்றனர். 1919ல், கனடிய நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கும் உரிமையை பெண்கள் பெற்றுக்கொண்டனர். Agnes Campbell MacPhail கனடிய பொது மன்றிற்கு (House of Commons) தேர்ந்தெடுக்கப்பெற்ற முதல் பெண்ணென்ற பெருமைக்குரியவர்.

1939 - 1945 இரண்டாவது உலகப்போர்க் காலம். முன்னர் ஆண் பாலாரால் செய்யப்பட்டு வந்த பெரும்பாலான பணிகளை பெண் தொழிலாளர்களைக் கொண்டு பிரதியீடு செய்தபோதிலும், சிறு சிறு மாற்றங்களை புகுத்தியதன் மூலம் முன்னைய பணிகளுக்கும், தற்போதைய பணிகளுக்குமிடையே வேறுபாடு இருப்பதாகக் காட்டி வேதன வேறுபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர். கனடிய பெண்கள் கனடியரல்லாத ஆண்களைத் திருமணம் செய்யுமிடத்து தமது கனடிய பிரஜாவுரிமையை இழப்பர் என்றிருந்த சட்டம் 1947ல் மாற்றியமைக்கப்பட்டது. 1951 ஒன்ராறியோ மாகாணம் ஆண், பெண் தொழிலாளர்களுக்கான சம சம்பள திட்டத்தை முதன்முதலில் அமுலாக்கியது. 1952ல் மானிட்டோபா மாகாணம் ஜூரி உறுப்பினர்களாக பெண்களை அங்கீகரித்தது. 1955 கனடிய கூட்டாட்சி அரச சேவையில் திருமணமான பெண்க ளுக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

1955ல், ஜமேக்கா, பார்படாஸ், டிரினிடாட், டொபாகோ மற்றும் கரிபியன் நாடுகளை சேர்ந்த பெண்கள் வீட்டுப்பணியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, குடிவரவாளர் அந்தஸ்து வழங்கப்பட்ட னர். கனடிய கூட்டாட்சி அரசினால் சம வேலைக்குச் சமமான வேதனம் என்ற சட்டமூலம் 1956ல் நிறைவேற்றப்பட்டது. 1960களில், பெண்கள் விடுதலை இயக்கம் தோற்றம் பெற்றது. பெரும்பாலான வெள்ளையின, நன்கு படித்த பெண்களை உள் ளடக்கிய இவ்வமைப்பு வேதனத்துடன் கூடிய மகப்பேற்று விடுமுறை, வன்புணர்வால் பாதிப்புற்றோருக்கான நிலையங்கள், கருக் கலைப்பு சட்டங்களிலான மாற்றங்கள் போன்ற கோரிக்கைகளுக்காக போராடின.

கனடாவின் பழங்குடியினப் பெண்கள், தங்கள் பழங்குடியின அந்தஸ்தை கைவிடாது கூட்டாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை 1960களிலேயே வென்றெடுத்தனர். இவ்வுரிமை பல கனடியப் பெண்களுக்கு 1918லேயே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணமான பெண்களுக்கு 1964ல் ஜூரி சபையுறுப்பினராக அனுமதி வழங்கப்பட்டது. இதே ஆண்டிலேயே பெண் கள், தங்கள் கணவரின் எழுத்து மூல ஒப்புதலின்றி வங்கி கணக்கைத் திறக்கும் உரிமையைப் பெற்றனர். 1967ல், Florence Bird தலைமையில் பெண்களின் நிலை குறித்து ஆராய றோயல் கமிஷன் உருவாக்கப்பட்டதோடு, 1969ல், சமூக உதவிப்பணம் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

பழங்குடியினப் பெண்கள், பழங்குடியினரல்லாத ஆண்களைத் திருமணம் செய்வதனால் எதிர்கொள்ளும் குடியியல் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி 15 ஆண்டுகளாக போராடிவந்த JeannetteVivian Corbiere Lavellஇன் முயற்சியின் விளைவாக 1985ல் இந்தியச் சட்டம் திருத்தப்பட்டது. 1971ல், கனடிய கூட்டாட்சி அரசு, Canada Labour Codeஐ பாலின அடிப்படையில் பாகுபாடு காண்பிப்பதை தடுக்கும் வகையில் திருத்தியதோடு, பதினேழு வாரகால மகப்பேற்று விடுமுறை வழங்கவும் ஏற்பாடு செய்தது.

ஒவ்வொரு ஆணும் சம்பாதிக்கின்ற டொலர் ஒன்றிற்கு, ஒவ்வொரு பெண்ணும் அறுபது சதத்தினையே சம்பாதிக்கிறாள் என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சர்வதேச மகளிர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் 1975ஐ பிரகடனப் படுத்தியதில் இருந்து அநேகமாக எல்லா நாடுகளிலும் முன்னேற்றகரமான மாற்றங்கள் தென்பட ஆரம்பித்திருந்தாலும் 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துதல்' மந்தகதியிலேயே விளைகிறதென் பதை நாம் காண்கூடாகக் காண்கிறோம். 1977ல் அறிமுகப்படுத் தப்பட்ட கனடிய மனித உரிமைச் சட்டங்களும், 1978ல் CanadaLabour Codeல் செய்யப்பட்ட மாற்றங்களும் விமானப் பணிப்பெண்களுக்கான சட்டப் பாதுகாப்புகளும், பாலின வேறுபாடின்றி பழங்குடியின மக்களுக்கான 1984ல் மேற்கொள்ளப்பட்ட அரசி யலமைப்பு திருத்தங்களும் நம்பிக்கையை மேலும் வலுவடையச்செய்கின்றன. இன்றுவரை நிலவும் பாலின ரீதியிலான ஊதிய வேறுபாடுகளும், அதி மேற்தரப்பினரால் வளைக்கப்படுகின்ற சட்டங்களும், ஆணாதிக்க சிந்தனைகளும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தினாலும் பெரும்பான்மையினரது பண்பட்ட சிந்தனைகளும், ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் புதிய தலைமுறையினரின் நேர்முக நடவடிக்கைகளும் மடமையைக் கொளுத்தும் மடந்தையருக்கு கைகொடுக்கும் என்றே நம்பலாம்.

- குரும்பசிட்டி ஐ.ஜெகதீஸ்வரன்(கனடா) -






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam