இலங்கை செய்திகள்

மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது - ஐங்கரநேசன்

14 Mar 2019

தலைமைகளிடமிருந்து மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுதுரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையிலேயே, யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் யாழ். அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் அதில் எதனையும் நிறைவேற்றியதாக இல்லை. காணாமல் போனோர் தொடர்பாக எவ்வித பதிலும் இல்லை. யுத்த குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவும் இல்லை.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றது இனவழிப்பு என நாம் கூறிவரும் நிலையில், போர் இடம்பெற்ற இந்த மண்ணில் வைத்து பிரதமர் அதனை மறப்போம், மன்னிப்போம் என்கிறார்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் ஐ.நா.விடம் மீண்டும் கால அவகாசம் கோரி நிற்கிறது. ஆனால், இலங்கைக்கு கால நீடிப்பு வழங்க கூடாதென தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் எழுச்சி பேரணி நடத்தப்படவுள்ளது. அவர்களது இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய பசுமை இயக்கம் பூரண ஆதரவை வழங்கும்” எனத் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்