உலகம் செய்திகள்

போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத்தீ விபத்தில் 57 பேர் பலி

19 Jun 2017

சுட்டெரிக்கும் கோடை வெயிலால், போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில் தப்பிக்க முயன்றபோது 57 பேர் கருகி பலி ஆகினர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று போர்ச்சுக்கல். தற்போது அங்கு கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ்சை கடந்து (104 டிகிரி பாரன்ஹீட்) வெயில் கொளுத்துகிறது.

இந்த நிலையில் அங்கு கடந்த வெள்ளிக்கிழமை கடும் வெயில், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று ஆகியவற்றின் காரணமாக காட்டுத்தீ பரவும் ஆபத்து இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் அபாய எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், தலைநகர் லிஸ்பனில் இருந்து வடக்கே 120 மைல் தொலைவில் அமைந்துள்ள பெட்ரோகா கிராண்டே நகரில் நேற்று முன்தினம் காட்டுத் தீ பிடித்தது. இந்த காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது. 60 இடங்களில் இப்படி தீ பிடித்து பரவி வருகிறது. போர்ச்சுக்கல்லில் இப்படி காட்டுத்தீ பிடித்து பரவுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கூட, இந்த தீ மிக தீவிரமாக பல பகுதிகளுக்கும் பரவி எரிந்து வருவதாகவும், 160-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க பயன்படுத்தப்படுவதாகவும், நூற்றுக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீயில் இருந்து தப்புவதற்காக குடிமக்கள் பலரும் முயற்சிக்கின்றனர். இப்படி முயன்று கார்களில் பயணம் செய்தவர்கள் பலரும் தீயில் சிக்கி உயிரோடு எரிந்து பிணமாகினர். இப்படி இதுவரை 57 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி அந்த நாட்டின் உள்துறை மந்திரி ஜார்ஜ் கோம்ஸ், டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ தீயில் சிக்கிய பல கார்கள், அதில் இருந்து வெளியே வர முடியாமல் போய்விட்டன. அவற்றில் பயணம் செய்தவர்கள் உயிரோடு எரிந்து விட்டார்கள்” என கூறினார்.

அந்த பெட்ரோகோ கிராண்டே நகரின் தலைவர் வால்டெமர் ஆல்விஸ் கூறுகையில், “ பல பகுதிகள் தீயினால் சூழப்பட்டு விட்டன. தீயை அணைப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் வீரர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “தீ மிக வேகமாக பரவி வருகிறது. இதில் பலர் பலியாகி இருப்பார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

போர்ச்சுக்கல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா கூறும்போது, “ துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து, சமீப ஆண்டுகளால் நாங்கள் கண்டிராத ஒன்றாக அமைந்து விட்டது. இதில் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. தீ பரவி வந்தாலும் மக்களை காப்பாற்றுவதற்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

போர்ச்சுக்கல் அதிபர் மார்சிலோ ரெபெலோ, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், “ மக்களின் வேதனைகளை பகிர்ந்து கொண்டேன். தீயணைப்பு வீரர்களும் தங்களால் முடிந்தளவுக்கு போராடி வருகி றார்கள்” என்று குறிப்பிட்டார்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்