இலங்கை செய்திகள்

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை- அமைச்சரவை அனுமதி

11 Jul 2018

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று  கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே,  மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  நீதியமைச்சர் தலதா அத்துகோரளை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.   

மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில், புத்தசாசன அமைச்சில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,  குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய நாட்டில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தனர். அத்துடன் மாகாநாயக்க தேர்ர்களும்  இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக நாட்டில் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில்  சட்டமும் ஒழுங்கும் முறையாக அமுல்படுத்தப்படும் போது, சட்டத்துக்கு பயந்து குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

இன்று போதைப்பொருள் வர்த்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது போல எதிர்வரும் காலங்களில், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகவும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்