இலங்கை செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளென இனங்காணப்பட்டோருக்கு விரைவில் மரண தண்டனை - அமைச்சர் ராஜித

12 Jul 2018

போதைப்பொருள் வர்த்தக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளிகளென இனங்காணப்பட்டோர், விரைவில் மரணத் தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அதற்கான பட்டியல் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது  என்றும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று  இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,  “பாரிய போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக, அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய, மரண  தண்டனை விதிக்க அமைச்சரவையில் ஏகமனதாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு மரண தண்டனையை வழங்குவதால் குற்றச்செயல்களைக் குறைக்க முடியுமெனக் கருதமுடியாது. எனினும், போதைப்பொருள் வர்த்தகக் குற்றச்சாட்டுகளுக்காக இன்று உலகில் பல நாடுகள், மரண தண்டனை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். அதிகளவில் போதைப்​பொருள் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறும் பிலிப்​பைன்ஸில் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி, போதைப்பொருளை  ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். 

இலங்கையில் பாரிய போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் 19 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது. இவர்களில் ஒரு தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இன்றி மரண தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்