உலகம் செய்திகள்

பொருளாதார தடையில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் நடவடிக்கை!

13 Feb 2018

பாரீஸ் மாநாடு நடைபெற உள்ளநிலையில் பாகிஸ்தான் துரிதமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து உள்ளது.

சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தாவா மற்றும் பலாக்-இ-இசானியாத் மற்றும் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ள அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இடம்பெற செய்யும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் துரிதகதியில் திருத்தம் கொண்டு வந்து உள்ளது என டான் செய்தி வெளியிட்டு உள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை பயங்கரவாத தடை இயக்க பட்டியலில் பாகிஸ்தான் இணைத்து உள்ளது.

பாகிஸ்தான் அரசு கொண்டுவந்த அவசர சட்டத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் ஒப்புதல் அளித்ததாக டான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் பயங்கரவாதிகள் என அறிவித்து தடை செய்யப்பட்டவர்களை, அமைப்புகளை தடை செய்வதற்கும், அவர்களது அலுவலகங்களுக்கு சீல் வைப்பதற்கும், வங்கிக்கணக்குகளை முடக்குவதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

 பயங்கரவாத விவகாரத்தில் அமெரிக்கா ஏற்கனவே பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்து உதவியை நிறுத்திவிட்டது. உலக நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

ஐ.நா. தடை விதித்த நிலையிலும் ஜமாத்-உத்-தவா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் வெளிப்படையாகவே பாகிஸ்தானில் செயல்பட்டன. ஏற்கனவே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாகிஸ்தானில் உண்மையான நிலையை அறிய ஐ.நா. குழுவும் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டது. ஐ.நா. குழுவின் விசாரணை அறிக்கையானது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என அந்நாட்டு அரசு தரப்பில்  அஞ்சப்படுகிறது என செய்திகள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு தண்டனை அளிக்கும் வகையில் ஐ.நா.சபை நடவடிக்கையை எடுக்கும் என்ற நிலையில் இப்போது பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு உள்ளது.

பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச அமைப்பு, பாகிஸ்தானை வலியுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்