கனடா செய்திகள்

பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக கனடாவால் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது

12 Jun 2018

ஜி-7 மாநாட்டில் 3.8 பிலலியனுக்கும் அதிகமான நிதி பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக கனடாவால் சேகரிக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கில் நடைபெற்ற மாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிதி உலகில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது.

கனடா தனது பங்காக 400 மில்லியன் டொலர்களை இந்த உதவித் திட்டத்திற்காக வழங்குகின்றது. எஞ்சிய தொகையை ஜி-7 குழுமத்தின் ஏனைய நாடுகள் மற்றும் உலக வங்கி என்பன இணைந்து வழங்குகின்றன.

எனினும் இந்த கூட்டு நிதி உதவித் திட்டத்திற்கு அமெரிக்கா தனது நிதிப் பங்களிப்பினை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இதற்கு நிதிப் பங்களிப்பு செய்யாமையை கனேடிய பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டினை கனடா தலைமையேற்ற நடாத்திய நிலையில், இவ்வாறு வறுமைப்பட்ட நாடுகளின் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கான நிதி உதவியினைத் திரட்டித் தருமாறு பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடம் 30 அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டு்ளள பிரமர் ஜஸ்டின் ரூடோ, அனைத்துப் பெண்களும் தற்காலத்திற்கு ஏற்ற புதிய தரமான கல்வியினையும், தொழிற் பயிற்சிகளையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை நாம் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெண்களின் கல்விக்காக முதலிடுவது என்பது சரியான ஒரு நடவடிக்கை என்பது மட்டுமின்றி, புத்திசாதுரியமான ஒரு செயற்பாடாகவும் அமையும் எனவும், பெண்களால் சாதகமான பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கான சிறந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களால் தம்மையும், தமது குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும், உலகத்தையும் மாற்றியமைக்க முடியும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்