இலங்கை செய்திகள்

பூநகரிப் பிரதேசத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாற்றம்

11 Oct 2018

கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலமாக மாறியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் குடிநீர் பிரச்சனை ஒரு பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. கூடுதலான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.

பூநகரிப் பிரதேசத்தை பொறுத்தவரையில் ஏறத்தாள 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உவர் நிலமாக மாறியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும், அதன் பின்னர் உவர் நீர்த்தடுப்பணைகள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டமையாலும் பூநகரிப்பிரதேசத்தைச்சூழவுள்ள உவர் நீர்த் தடுப்பணைகள் அழிவடைந்தன.

இதனால் கடல் பெருக்குக் காலங்களில் உவர் நீர் விவசாய விளைநிலங்களுக்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்களின் ஊடாக உவர் நீர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு உவர் நீர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு பூநகரிப் பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறு குளங்களையும் புனரமைத்து மழைநீரைத் தேக்குவதன் மூலம் நிலங்களின் உவர்த் தன்மையைப் போக்கி விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என அவர் தெரிவித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV