இந்தியா செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில் பெயர்ந்த தார் சாலை

19 Mar 2023

ஆலடிக்குமுளை ஊராட்சி சமத்துவபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில் தார் சாலை பெயர்ந்து போனது. அதில் ஒட்டு போடப்பட்டு வருவதால் புதிதாக தார் சாலை அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமத்துவபுரம் மறுசீரமைப்புக்கு ரூ.1½ கோடி நிதி

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் வீடுகள், சமுதாயக்கூடம், அங்கன்வாடி, நூலகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை சேதம் அடைந்திருந்தது.இவைகளை மறு சீரமைப்பு செய்வதற்காக தமிழக அரசு ரூ.1½ கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிதியில் மேற்குறிப்பிட்ட அனைத்து வேலைகளும் நடைபெற்று சமுதாயக்கூடம், நூலகம் அங்கன்வாடி என சில இடங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரே மாதத்தில் பெயர்ந்துபோன தார் சாலை

சமத்துவபுரத்துக்கு செல்லும் தார் சாலை மிகவும் சேதம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் சாலைகள் மிகவும் அரிக்கப்பட்டு இந்த சாலையில் வாகனங்களே செல்ல முடியாத நிலை இருந்தது.இதனையடுத்து இந்த தார் சாலை போடுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் இந்த தார் சாலை போடப்பட்டது. ஆனாலும் தார் சாலை போட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே சாலையில் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து மீண்டும் குண்டும், குழியுமாக மாறியது. இதனால் சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் இந்த சாலையில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் மிகவும் பாதிப்பு அடைந்தனர்.

கலெக்டருக்கு கோரிக்கை

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சமத்துவபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அதில், சமத்துவபுரம் சுடுகாட்டுக்கு செல்லும் சாலைகள் போட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பெயர்ந்து விட்டதால் அந்த சாலையில் ஒட்டு போட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை மீண்டும் புதிதாக போட்டுத்தர வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

வீணாகும் அரசு பணம்

பல ஆண்டுகள் கழித்து தமிழக அரசு சமத்துவபுரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள சூழ்நிலையில் அரசு பணம் வீணாவது மட்டுமின்றி அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam