உலகம் செய்திகள்

பிரெட்டி சூறாவளி: மலாவி நாட்டில் 326 பேர் பலி; 5 லட்சம் பேர் பாதிப்பு

18 Mar 2023

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியில், பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை எச்சரித்து இருந்தது. இதற்கேற்ப சூறாவளி புயலால் கடந்த 4 நாட்களாக பரவலாக பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மலாவியில் பிரெட்டி சூறாவளி புயலுக்கு 326 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஐ.நா.வுக்கான மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கின்றது.

இதன்படி, சூறாவளியால் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.8 லட்சம் பேர் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர் என தெரிவித்து உள்ளது. தொடர்ந்து நிலைமை இன்று மோசமடைய கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சூறாவளியால், எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று, பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்த துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார்.

தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. எனினும், பிரெட்டி சூறாவளியின் அடுத்தடுத்த தாக்கத்தினால், வெள்ளம் உள்ளிட்ட காரணிகளால் 5.1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொசாம்பிக் நகரில் மட்டுமே 3.4 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. காலரா உள்ளிட்ட நோய் பரவலுக்கான எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam