கனடா செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயங்கர காட்டுத் தீ

09 Jul 2017

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 180 இற்கும் மேற்பட்ட காட்டுப்பகுதிகளில் நேற்றைய தினமும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய இந்த காட்டுத்தீ வடக்கில் வில்லியம் ஏரியிலிருந்து 100 மைல் தூரத்திற்கும் மேற்கில் பிறிஸ்டனிலும் பரவியுள்ளது. இதன் காரணமாக பிராந்திய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை வரை சுமார் 7000 பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு வெளியேறுவோரில் சிலர் தமது பண்ணை விலங்குகளை விட்டுச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத்தீ காரணமாக இதுவரை இறப்புக்களோ அல்லது காயங்கள் ஏற்பட்டமைக்கான சம்பவங்கள் எவையும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதன் மற்றும் அதிக காற்று காரணமாக தொடர்ந்து காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்