இந்தியா செய்திகள்

பா.ஜனதாவுக்கு பதிலடி தரும் பெண்கள்

11 Aug 2017

அரியானா மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகள் வெர்னிகா (வயது 29). இவரை கடந்த 4–ந்தேதி இரவு, சண்டிகாரில் மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாசும், அவரது நண்பர் ஆசிஷ்சும் பின் தொடர்ந்து சென்று, தொல்லை செய்து, கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மாநில பா.ஜனதா துணைத்தலைவர் ராம்வீர் பட்டி கருத்து தெரிவிக்கையில், ‘‘நள்ளிரவில் பெண்கள் ஏன் வெளியே வர வேண்டும், அவர்களுக்கு அந்த நேரத்தில் என்ன வேலை?’’என கேள்வி எழுப்பினார்.

இது உலகமெங்கும் உள்ள இளைய தலைமுறைப் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பா.ஜனதாவுக்கு பதிலடி தருகிற விதத்தில் அவர்கள் பீர் பாட்டிலுடன் காட்சி அளிப்பது போலவும், மதுபான விடுதியில் ஒன்று சேர்ந்து பீர் குடிப்பதுபோலவும், அரை குறை உடையில் தோன்றியும் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அவற்றை, ‘‘நள்ளிரவுக்கு முன்னர் வீடு திரும்புவதற்கு நாங்கள் ஒன்றும் சிண்ட்ரெல்லா அல்ல’’ என்று கூறுகிற வகையில், ‘அயிண்ட் நோ சிண்ட்ரெல்லா’ என்ற சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் இந்திய பெண்களில் சிலர் வெளியிட்ட கருத்துகள்:–

சான்:– நெறிமுறைப்படி உங்கள் மகன்களை வளர்க்க முடியாவிட்டால், அவர்கள் கழுத்தின் மீது தோல் பெல்ட் போட்டு (நாய்போல) இழுத்து செல்லுங்கள்.

நபகல் பிட்டா:– நாங்கள் விரும்புகிற நேரத்தில் வெளியே செல்வதை யாராலும் தடுக்க முடியாது. பொது இடங்கள் பெண்களுக்கானவை.

பிரணாப் முகர்ஜி மகள் ‌ஷர்மிஸ்தா முகர்ஜி:– நள்ளிரவு 12 மணிக்கு நான் வெளியே செல்கிறேன் என்றால் நான் கற்பழிக்கப்படுவேன், மானபங்கப்படுத்தப்படுவேன், என்னை பின்தொடர்வார்கள் என்று அர்த்தம் அல்ல. 24 மணி நேரமும் என் கண்ணியம், என் உரிமை.

பலாக் சர்மா:– ஹாய், இது நள்ளிரவுதான். நான் வெளியேதான் இருக்கிறேன். நான் ஒன்றும் சிண்ட்ரெல்லா அல்ல.

பூஜா:– பிற்போக்கான இந்தியாவே, பகலானாலும், இரவானாலும் நான் விரும்பியதை செய்வேன். என்னை தடுத்து நிறுத்த முடியும் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.

போஸ் சுருதி:– நான் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்போது வெளியே செல்ல வேண்டும் என்று எங்களுக்கு கற்பிக்க தேவையில்லை.

சண்டிகார் பா.ஜனதா பெண் எம்.பி., கிரண் கெர்:– இரவு நேரத்தில் ஏன் பெண் பிள்ளைகள் வெளியே போகக்கூடாது? அவர்கள் பகலில் பாதுகாப்புடன் இருப்பார்கள், இரவில் பாதுகாப்பு இருக்காதா? அப்படியென்றால் பிரச்சினை ஆண்களிடம்தான். இரவு நேரத்தில் அவர்களுக்கு ஏதோ நேர்கிறது என்றால், அவர்களை ஏன் வீட்டுக்குள் நீங்கள் வைக்கக்கூடாது?


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV