இந்தியா செய்திகள்

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

09 Oct 2019

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றை ஒட்டி பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.  நேற்று ஆயுத பூஜை விடுமுறை என்பதால் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.


கோவை கவுண்டர் மில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சிலர் நேற்று தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது, பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து சிலர் குளித்து மகிழ்ந்தும், ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மணல்திட்டில் சமையல் செய்தும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். 

இந்நேற்று மாலை திடீரென பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பம்ப் ஹவுஸ் பகுதியில் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வந்திருந்த 51 பேர் ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்ததும் கரையில் இருந்தவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்குள்ள பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய 51 பேர் பரிசலில் மீட்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன.

மேட்டுப்பாளையம் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொள்வது அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்