உலகம் செய்திகள்

பக்ரைன் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை

04 Nov 2018

பக்ரைன் நாட்டில் முடியரசராக இருப்பவர் மன்னர் ஹமது. இவரது ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெஃபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

 
மன்னரின் முடியாட்சியை கடுமையாக எதிர்த்தும், ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.  இதனால், அல் வெஃபாக் இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்களை மன்னர் ஹமது தடை செய்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போராடிய பலரையும் கைது செய்துள்ளார்.


இந்த நிலையில், பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக கத்தார் நாட்டுடன் இணைந்து சதி செய்வதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கத்தார் நாடு, ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனும், ஈரானுடனும் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு பக்ரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான உறவை முற்றிலுமாக முறித்து கொள்ள முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்