இலங்கை செய்திகள்

நேற்றிரவு ஜனாதிபதி, பிரதமர் அவசர சந்திப்பு

13 Feb 2018

உள்ளூராட்சி தேர்தலின் பின்னான சூழலில், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் நேற்று இரவு 8.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை சந்தித்ததன் பின்னர் பிரதமர் இந்த சந்திப்பில் ஈடுபபட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப தீர்மானமொன்றை எடுப்பதற்குரிய நிலைமை தனக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதற்கு முன் பிரதமரே ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் பலரும் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

நேற்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது ஜனாதிபதியின் தரப்பு சார்பில் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்