கனடா செய்திகள்

நெடுஞ்சாலை 401இல் லெஸ்லி அருகே இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு- பத்துப் பேர் காயம்

08 Sep 2019

நேற்று சனிக்கிழமை மாலை நெடுஞ்சாலை 401இல், லெஸ்லி அருகே இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான வீதி விபத்தில் 86 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் நான்கு வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த விபத்து நேர்ந்த இடத்திலிருந்து 86 வயது பெண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதனையும், மருத்துவமனையில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதனையும் ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுவர்கள் மூவர் உள்ளிட்ட பத்துப் பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேர்ந்தமைக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளுக்காக விபத்து இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், சில மணி நேரங்களின் பின்னர் அவை மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்