வாழ்வியல் செய்திகள்

நெஞ்செரிச்சல் மருந்துகளால் சிறுநீரகம் பழுதடையும்: ஆய்வில் எச்சரிக்கை

22 Feb 2017

நம்மில் பலரும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் மருந்துக் கடைக்குச் சென்று நெஞ்செரிச்சலை அடக்க பிரபலமான மருந்துகளை வாங்கி அதனை எடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்கள். அத்தகைய மருந்துகளால் சிறுநீரகம் பழுதடையும் வாய்ப்பும் சிறுநீர்க் குழாய்கள் பாதிப்படையும் நிலையும் ஏற்படலாம் என்று புதிய ஆய்வொன்று எச்சரிக்கை. 

இதனைப் பலரும் நீண்ட காலமாக செய்து வருவதையும் நாம் பார்த்திருக்கலாம், குறிப்பாக மதுபானம் எடுத்துக் கொள்ளும் பலரில் ‘விவரம் அறிந்தவர்களாக’ தங்களை நினைத்து கொள்பவர்கள் காலையில் உணவு அருந்துவதற்கு முன்னதாக வெறும் வயிற்றில் ‘ரானிடிடின்’ அல்லது ‘ஒமிப்ர்சோல்’ ஆகிய அசிடிட்டி மாத்திரைகளை உட்கொள்வதும் உண்டு. மேலும் வலிநிவாரணி மாத்திரைகளுடன் இந்த அசிடிட்டி கட்டுப்பாடு மாத்திரைகளை சேர்த்து எடுத்துக் கொள்ளும் வழக்கமும் நம்மை விட்டு நீங்கா பழக்கமாகும். 

இவையெல்லாம் நீண்டகாலமாகச் செய்து வந்தால் உடனடியாக நிறுத்துமாறு எச்சரிக்கிறது வாஷிங்டன் பல்கலைக் கழக ஆய்வு. 

அன்டாசிட்,ரானிடிடின், ஃபேமோடிடின், ஒமிப்ரசோல், லான்சப்ரசோல், போன்ற நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு ‘புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள்’ என்று மருத்துவ உலகில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. திடீரென கிட்னி பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு மருத்துவர்கள் இத்தகைய மருந்துகளை உடனடியாக நிறுத்துவது வழக்கம். 

இந்நிலையீல் வாஷிங்டன் பல்கலைக் கழக மற்றும் செயிண்ட் லூயிஸ் ஹெல்த் கேர் ஆகியவை இத்தகைய நெஞ்செரிச்சலுக்கு எதிரான மருந்துகளான புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களை எடுத்து கொள்ளும் 125,000 நோயாளிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டதனால் நீண்ட நாளைய கிட்னி பழுது ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பலருக்கும் கிட்னி செயல்பாடுகள் கோளாறடைந்து வந்திருப்பதே தெரியாமல் இருந்துள்ளது. 

மேலும் உடனடி கிட்னி பிரச்சினைகள் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தும் மருந்துகளால் ஏற்பட்டவை என்று அறியப்பட முடியாதவை என்கிறார் ஆய்வு மருத்துவர் ஜியாத் அல்-அலை. “அதாவது கிட்னி பிரச்சினைகள் மவுனமாக, மெதுவாக காலப்போக்கில் ஏற்பட்டிருக்கும், கிட்னி செயல்பாட்டை தூர்ந்து போகச் செய்து நீண்டகால கிட்னி நோயை ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே நெஞ்செரிச்சல் மருந்துகளை எப்போதிலிருந்து, எப்படியெல்லாம் எடுத்துக் கொண்டார்கள் என்பதை நோயாளிகள் மருத்துவர்களிடம் தெரிவிப்பது அவசியம்.” என்கிறார் இவர். 

அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 50 லட்சம் பேர் நெஞ்செரிச்சல், அல்சர், அமில அதி ஊர்தல் பிரச்சினைகள் உள்ளவர்கள். இவர்களுக்கு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களே மருந்தாக அளிக்கப்படுகின்றன, இது உடனடியாக ரிலீஃப் கொடுக்கும், ஆனால் மவுனமாக இது செய்யும் வேலை கிட்னி பிரச்சினை என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள் 

இந்தியாவில் பலரும் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் பிரச்சினையைக் கூறி கடைக்காரர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்கள். நெஞ்செரிச்சல் மருந்துகளை கண்டமேனிக்குப் பயன்படுத்தியவர்களில் 80% பேருக்கு கிட்னி பிரச்சினை உடனடியாக ஏற்படுவது தெரியாவிட்டாலும் உடலிலிருந்து சிறுநீர் வெளியாறாத பிரச்சினை ஏற்படும், களைப்பு, கணுக்கால், கால்களில் வீக்கம் ஏற்படும், இது கிட்னி பிரச்சினைக்கு ஒரு அறிகுறி என்கிறது இந்த ஆய்வு. 

உடனடி கிட்னி பிரச்சினை இல்லை என்பதால் கிட்னி பழுதடையவில்லை என்று நாம் நினைக்கக் கூடாது, அது சப்தமில்லாமல், அறிகுறி காட்டாமல் உள்ளுக்குள் பழுதடையும் வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. 

கிட்னி பழுதடைந்தால் உடலிலிருந்து கழிவுகளை அது திறம்பட வெளியேற்றாது. இந்த நிலையில்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. 

நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்த கண்மூடித்தனமாக நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரை மருந்துகளால் கிட்னி பழுதடையும் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய இந்த ஆய்வின் முழு விவரங்கள் ‘கிட்னி இண்டர்நேஷனல்’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்