கனடா செய்திகள்

நியு பவுன்லாந்தில் 87-வயது வயோதிபருக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம்

15 Apr 2018

நியு பவுன்லாந்தில் 87-வயதுடைய வயோதிபர் ஒருவர் இரண்டு இரவுகள் தனது காரிற்குள் அகப்பட்டு உயிருடன் இருந்துள்ளார். நியு பவுன்லாந் மேற்கு கடற்கரையோர பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த பயமுறுத்தும் அனுபவம் எவருக்குமே வரக்கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை காலை மென்மையான வசந்த கால  காலை நேரத்தில் தனது காரில் கொட்றோய் பள்ளத்தாக்கு வழியாக சென்று வர புறப்பட்டதாக ஸ்ரன் லவிற்றெ என்ற இந்த வயோதிபர் தெரிவித்தார். வீடு திரும்புகையில் ஏற்பட்டது பிரச்சனை.

பிற்பகல் 2.30-அளவில் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கையில் குளம் ஒன்றின் அருகாமையில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். திடீரென தான் நெடுஞ்சாலை கிழக்கு மற்றும் மேற்கு பாதையின் குறுக்கே ஒரு பள்ளத்தில் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

குன்றின் மேலாக வாகனம் கீழே வந்து குறுகிய பள்ளத்தாக்கில் நின்று விட்டது. வாகனத்தின் கண்ணாடிகள் மூடப்பட்டு கண்ணாடியில் பனி மிக ஆழமாக படிந்த நிலையில் காரிற்குள் அகப்பட்டு கொண்டதை உணர்ந்தார். தொலை பேசி இல்லை. சாப்பாடும் ஏதும் இல்லை.

பொலிசாரை அழைப்பதும் தனது மனைவிக்கு தன் நிலையை தெரியப்படுத்துவதும் இவரது முதல் நோக்கமாக இருந்துள்ளது. நெடுஞ்சாலையில் கிராமப்புறத்தில் அகப்பட்டு கொண்டதால் எந்த வித  தொலைபேசி வசதிகளும் இருக்கவில்லை.

எதுவும் செய்ய முடியாத நிலையில் தன்னைக் காணவில்லை என எவராவது தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார். எவரும் வரவில்லை. இருண்டு விட்டது. வீட்டில் இருந்து புறப்பட்ட போது வெப்பநிலை எட்டு டிகிரிகளாக இருந்துள்ளது. அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணிந்து புறப்பட்டுள்ளார். காரை இயக்க முயன்று முடியாமல் போனது. இரவு பூராகவும் காரிற்குள் இருந்துள்ளார்.

இரண்டாம் நாள் காலை நடுங்கத் தொடங்கியது. ஆனாலும் தன்னை காப்பாற்ற யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளார். ஆனால் நேரம் கடந்தது. மீண்டும் இரவும் வரத்தொடங்கியது.

யூனிவேர்சல் ஹெலிகொப்டர்கள் மற்றும் பரசீக் புறூக் தேடல் மற்றும் மீட்பு குழுவின் உதவியுடன் நடாத்திய தேடுதலில் சனிக்கிழமை காலை 10மணியளவில் இவரை கண்டு பிடித்ததாக ஆர்சிஎம்பி தெரிவித்தது. 20-நிமிடங்கள் தோண்டி காரின் கதவை திறந்து இவரை வெளியே எடுத்துள்ளனர்.

மீட்பாளர்கள் இவரை நெடுஞ்சாலை வரை அழைத்து வந்து அங்கிருந்து வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்