இலங்கை செய்திகள்

நவாலி படுகொலை நினைவு நாள் இன்று

09 Jul 2017

 1995ஆம் ஆண்டு நவாலி சென்.பீற்றஸ் தேவாலயத்தின் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 22ஆவது நினைவுதினம் இன்றாகும்.

கடந்த 1995ஆம் ஆண்டு இதே நாளில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர், வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்த, விமானப்படையும் அவர்களுடன் இணைத் தாக்குதல் நடத்தியது.

 தமது சொந்த இடங்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு நவாலி புனித பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சம் புகுந்த மக்களை குறிவைத்து, தேவாலயத்தின் மீதும் ஆலயத்தின் மீதும் விமானப்படையினர் நடத்திய சரமாரி குண்டுத்தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், அன்று காலை முதல் வலி மேற்கு, தெற்கு பிரதேசங்களான அளவெட்டி, சண்டிலிப்பாய், மூளாய், பொன்னாலை என வடபகுதியின் நாலாபுறமும் பீரங்கித் தாக்குதல், ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டன.

அன்றைய தினம் உயிரிழந்த உறவுகளின் நினைவாக, நவாலியில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, வருடாவருடம் அங்கு தமது உறவுகளை  நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV