இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் குண்டுத் தாக்குதல் நடக்கும் என அநாமதேய கடிதம்

16 May 2019

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

”நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர்” என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று  கிடைத்தது.

அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர், ஆளுநரின் சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

கடிதம் குறித்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.

இதனையடுத்து அநாமதேயக் கடிதம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இன்று மாலை தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், நல்லூர் சூழலில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், நல்லூர் பிரதேசத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் வெளிமாவட்டத்தவர்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாளை மறுதினம் தமிழ் மக்கள் முன்னெடுக்கவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம்  கிடைத்துள்ளமை சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்