இலங்கை செய்திகள்

நல்லாட்சி அரசாங்கம் வடக்கில் நிலையான அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை - நாமல் ராஜபக்ஷ

11 Jul 2018

நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கான நிலையான அபிவிருத்திப் பணிகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை  என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே  அதிக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர்  செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது.  நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். 

யாழ்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ யாழ் ஊடக அமையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  "இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியமைத்தனர். வழங்கப்பட்ட  வாக்குறுதிகளும் வெறும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றது. 30 வருட காலம் யுத்தம் இடம் பெற்ற வடக்கில் யுத்தத்திற்கான எவ்வித  சுவடுகளும் காணப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெற்கினை விடய வடக்கிற்கே  அதிகமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார். ஆனால் தேசிய அரசாங்கம் 3 வருட காலத்தில் எவ்வித அபிவிருத்திகளின் நிலைபேறான திட்டங்களையும்  முன்னெடுக்கவில்லை.

வடக்கிற்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதாக மக்கள் தெரிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  பெயரளவில்  எதிரணியாகவும் உண்மையில்  அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர். அரசாங்கத்தின் குறைப்பாடுகளை இவர்கள் இதுவரை காலமும் சுட்டிக்காட்டவில்லை.  அரசாங்கத்திற்கு  ஆதரவாகவே  அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். வடக்கிற்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதை  தடுக்கும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  அதற்கு ஆதரவாகவே செயற்படுகின்றனர்.

வடக்கில் இன்று வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையே பிரதானமாக காணப்படுகின்றது. மறுபுறம் விவசாயத்துறை இன்று பௌதீக காரணிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எவ்வித  அக்கறையும் மேற்கொள்ளவில்லை.

30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த  முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இடம் பெறவில்லை ஆனால் இன்று தேசிய அரசாங்கத்தின் மூன்று வருட ஆட்சியில் வடக்கு மக்களின் வாழ்க்கை மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.

நிலைபேறான அபிவிருத்தியை வடக்கிற்கு செயற்படுத்த வேண்டுமாயின் ஆட்சி மாற்றம்  அவசியமானதாகவே காணப்படுகின்றது.  மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதற்கு  முயற்சிகளை மேற்கொள்ளாமல் விரைவில் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும். அப்போது மக்கள் தங்களது பதிலை நன்கு வெளிப்படுத்துவார்கள்" எனத் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்