வரலாறு செய்திகள்

நம்பிக்கையின் மறு உருவம் கல்பனா சாவ்லா

19 Dec 2016

விண்வெளிக்கு பயணம் சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற சிறப்பை இந்தியாவுக்கும், பெண் இனத்திற்கும் தந்து பெருமை சேர்த்தவர் கல்பனா சாவ்லா. இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில், மார்ச் 17, 1962-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் பெயர் பனாரஸ் லால் சாவ்லா- சன்யோகி தேவி.

 

இந்தியாவின் பிரபலமான விமானியும், தொழிலதிபருமான ஜே.ஆர்.டி. டாடாவை பார்த்ததிலிருந்தே கல்பனாவுக்கு விமானம் ஓட்டும் ஆசை ஊற்றெடுத்ததாக அவர் கூறுவார். அந்த ஆர்வத்தால், 1982-ம் ஆண்டில் சண்டிகாரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், விண்வெளி பொறியியலில் சேர்ந்து, தனது இளநிலை பொறியியல் பட்டத்தை முதல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முதுநிலை பட்டத்தை 1984-ல் பெற்றார். கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986-ல் இரண்டாம் முதுநிலை பட்டமும் பிறகு, அதே துறையில் 1988-ம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்று விண்வெளி துறையில் உயர்ந்த கல்வி தகுதியாளர் ஆனார்.

 

கல்பனா சாவ்லா விமானியாக மட்டுமின்றி, வானவூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்காவின் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் ஆசிரியராகவும், அத்துறை ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஜீன் பியர்ரே ஹாரிசனை 1983-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

 

அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற பின், நாசாவில் நடந்த பல சுற்று நேர்முகத் தேர்வில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995-ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ். 87-ல் பயணித்த ஆறு விண்வெளி வீரர்களில் கல் பனாவும் ஒருவராக, 1997-ல் ஆயத்தமானார். இரண்டு வல்லுநர்களில் ஒருவராகவும், ஒரே பெண்மணியாகவும் தனது முதல் பயண குழுவில் இடம் பெற்றிருந்தார்.

 

வெற்றிகரமான முதல் விண்வெளி பயணத்தில் 10.67 மில்லியன் கிலோ மீட்டர் பயணித்தார். 252 நாட்கள் விண்வெளியில் இருந்து கொண்டு பூமியை சுற்றியுள்ளார். இதற்குமுன், இந்தியரான ராகேஷ் சர்மா 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்திருந்தார். அதனால், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்ணாகவும் இரண்டாவது இந்தியராகவும் கல்பனாவுக்கு இந்த பயணம் பெருமை தேடித்தந்தது.

கல்பனா உட்பட 7 பேர்கொண்ட குழுவுடன் 2003-ல் பயணித்த விண்கலம், தனது 16 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடமே இருந்த நிலையில், விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசா விண்ணோட்ட பதக்கம் மற்றும் சிறப்பு சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கியது.

ஒரு சாதாரண பள்ளியில் படிப்பை தொடங்கி, வானளாவ கனவு கண்ட கல்பனா சாவ்லா அந்த வானத்தையே வசமாக்கிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. கனவோடு கலந்த உழைப்பும், முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்புதான் கல்பனாவை விண்ணுக்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது. கல்பனா சாவ்லாவை கவுரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய அரசு அவரது பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. விண்வெளி வரலாற்றில் அவரது வரலாறு என்றும் பேசப்படும். அவரைப்போலவே நாமும், நமது கனவை நனவாக்க கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம்!

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்