03 Mar 2021
'நடுகை' கவிதை இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மாலை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நடுகை கவிதை இதழ் 'அம்பலம்' சஞ்சிகையை நடாத்தி வந்த குழுமத்தினரால் முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டு வந்தது யாவரும் அறிந்ததே, இளைய தலைமுறைக் கவிஞர்களுக்கான ஒரு பயில்களமாக குறிப்பாக மாணவர்களுக்கும் கவிதைக்களத்தைத் திறந்துவிடும் வாய்ப்பை அதிகம் வழங்கும் நோக்கிலும் சிறிய இதழாக அதே வேளை காத்திருப்பான கவிதைப் படைப்புகளையும் தாங்கி வெளிவந்தது, நான்கு இதழுடன் நின்றுபோன ஒரு சூழலில் தற்போது மீண்டும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் கிளிநொச்சியில் இருந்து புத்துயிர்ப்புடன் வெளிக்கொணரப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்குபற்றியதோடு முதன்மை விருந்தினர் உரையையும் காத்திரமாக நிகழ்த்தியிருந்தார். கவிஞர் தீபச்செல்வன் நிகழ்வினை தலைமையேற்க அறிமுக உரையை பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் வில்லரசன் அவர்கள் வழங்கினார்.
'நடுகை' பயணக் குறிப்புகள் எனும் தலைப்பில் ஆசிரியர் றமேஸ் அவர்கள் நீண்டதொரு உரையை இலக்கிய ஆய்வு நோக்கில் நிகழ்த்தியிருந்தார். சிறப்பு நிகழ்வாக, 'அரங்காலயா' நாடக மன்றத்தின் தயாரிப்பில் அருணாசலம் சத்தியானந்தம் அவர்களின் நெறியாழ்கையுடன் 'பேசாதநிலவு' கவிதை ஆற்றுகை நிகழ்வு இடம்பெற்றது, பெருங்கவிஞர் சேரன், கவிஞர் தீபச்செல்வன், கவிஞர் சண்முகம் சிவலிங்கம், கவிஞர் மாயன் (இரா.சிறீஞானேஸ்வரன்) அவர்களது தேர்ந்த கவிதைகள் அரங்கில் காட்சிப்படிமங்களோடு ஆற்றுகையாளர்களால் நிகழ்த்தப்பட்டது.
இசைப்பிரியாவின் வன்கொடுமையை பற்றிய தீபச்செல்வன் மற்றும் மாயனின் கவிதைகள் மிகவும் உணர்வுபூர்வமாக அரங்கில் எடுத்தாழப்பட்டதைப் பலரும் பாராட்டினர். நிகழ்வின் நன்றி உரையை ஜனதா நீக்கலாஸ் வழங்கினார்.
தொற்றுநோய்க்குள் நீண்ட நாட்களின் பின் நடைபெற்ற இந் நிகழ்வில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.