இந்தியா செய்திகள்

நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

24 Jan 2020

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி  தேர்தல் நடத்தப்பட்டது. விஷால்-நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ்  தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டன. இந்த தேர்தலை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் ஓட்டு எண்ணிக்கையை நீதிபதி நிறுத்தி வைத்தார். கடந்த 7 மாதங்களாக ஓட்டுகள் எண்ணப்படாமல் உள்ளது.

இதனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கி உள்ளன. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதும் பணம் இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் செயல்படவில்லை என்று பதிவாளருக்கு அளித்த புகாரின் பேரில் தற்போது சங்கத்துக்கு தனி அதிகாரியை அரசு நியமித்து உள்ளது. 

இதற்கு நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மறுபுறம்  நடிகர் சங்க தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளன. எனவே இந்த தேர்தலே செல்லாது என அறிவிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

எந்த முறைகேடும் நடக்கவில்லை, தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஓட்டு எண்ணிக்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் எல்லாம் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கட்ட விசாரணைகள் நடந்த நிலையில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்கினார். 

அதில் , கடந்தாண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்த ரத்து செய்யப்படுகிறது.  நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என கூறினார். மேலும்  பதவிக்காலம் முடிந்த பின் எடுத்த முடிவால் பத்மநாபன் நியமனமும், அவர் நடத்திய தேர்தலும் செல்லாது. 

புதிய நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலை தயாரித்து 3 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், மறுதேர்தல்  நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்கத்தை சிறப்பு அதிகாரி கீதாவே தொடர்ந்து கவனிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். பதவிக்காலம் முடிந்த பிறகு நடிகர் சங்க தேர்தலை நடத்த நிர்வாகிகள் முடிவு எடுத்ததால் அதனை ரத்து செய்கிறோம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து  நடிகர் சங்கத்திற்கான மறுதேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கடந்த ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாசர், கார்த்தி தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிடக்கோரிய விஷாலின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்