இந்தியா செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: இ-சேவை மையத்திற்குள் புகுந்து மனைவியை எரித்துக் கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை

19 Sep 2023

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளி நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஹீம் (வயது 50), சென்ட்ரிங் தொழிலாளி. இவருடைய மனைவி நாதிரா (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாதிரா பாரிப்பள்ளியில் உள்ள ஒரு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நாதிராவின் நடத்தையில் ரஹீமுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று நாதிரா வழக்கம் போல் இ-சேவை மையத்திற்கு பணிக்கு சென்றார். அங்கு அவர் பணியில் இருந்த போது ரஹீம் திடீரென பெட்ரோல் கேனுடன் இ-சேவை மையத்திற்குள் புகுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நாதிரா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்து இ-சேவை மையத்தில் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதே சமயத்தில் தீயின் கோரப்பிடியில் நாதிரா சிக்கி அலறி துடித்தபடி அங்குமிங்கும் ஓடினார். இந்த பரபரப்புக்கு இடையே சக ஊழியர்கள் காப்பாற்ற முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்தில் நாதிரா உடல் கருகி அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மனைவியை கொன்றதும் அங்கிருந்து தப்பி ஓடிய ரஹீம் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாரிப்பள்ளி போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடத்தை சந்தேகத்தால் மனைவியை எரித்துக் கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஹீம் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதுபோல் கடந்த மாதம் தகராறு செய்து மனைவி நாதிராவை பலமாக தாக்கினார். இதில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் இ-சேவை மையத்துக்குள் புகுந்து மனைவியை எரித்து கொன்று விட்டு உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam