23 Jun 2022
தமிழக அரசாங்கத்தின் நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து, அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்த போதும், வேலை செய்யும் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசிப் பொதி தோட்ட நிர்வாகத்தால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து, தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தொழிலாளர்களுக்கு அறிவித்த நிலையில், அதனைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிலாளர்கள் வந்தபோது, 110 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து தோட்ட அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது.
அத்தோடு நிவாரணம் கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையில்லை. என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தோட்ட அதிகாரிகள் அரிசி வழங்கும் நிலையத்தை மூடி விட்டுச் சென்றனர்.