இந்தியா செய்திகள்

தேவேகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

08 Nov 2018

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடாவை சந்தித்தார்.

பத்மநாபா நகரில் உள்ள தேவேகவுடா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவரது மகனும் கர்நாடகா முதல்- மந்திரியுமான குமாரசாமியும் அப்போது உடன் இருந்தார். இதை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தெரிவித்து உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இந்த கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. #ChandrababuNaidu 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்