இந்தியா செய்திகள்

துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் வெங்கையா நாயுடு

17 Jul 2017

 

 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். காலை ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது, மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து அடுத்த மாதம் 5–ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். ஆனால் பா.ஜனதா தங்கள் வேட்பாளரை அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இந்தநிலையில் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் பா.ஜனதாவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இப்போது பா.ஜனதாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று மாலை பாரதீய ஜனதா கட்சியின் உயர் மட்டகுழு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இதுதொடர்பான முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் இந்தியாவில் பா.ஜனதாவிற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக வெங்கையா நாயுடுவை களமிறக்கலாம் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. இருப்பினும் வெங்கையா நாயுடு போட்டியிடுவது முடிவு செய்யப்படவில்லை. பிரதமர் மோடி அவரை அமைச்சரவையில் விடுவிப்பாரா என்ற கேள்வியும் உள்ளது.

இதுதொடர்பாக வெங்கையா நாயுடு பேசுகையில், எந்தஒரு விஷயத்திலும் நான் போட்டியில் கிடையாது. வேட்பாளர் குறித்து கட்சியின் பாராளுமன்ற குழுதான் முடிவு செய்யும். அனைத்தும் யூகங்கள்தான், கட்சியின் பாராளுமன்ற குழுவே கடைசி முடிவு எடுக்கும் என கூறிஉள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்