சினிமா செய்திகள்

திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான படம்

16 Apr 2018

தமிழ் திரைத் துறையினருக்கு திருட்டு இணையதளங்களில் புதிய படங்கள் வெளியாகி பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரத்திலேயே இணையதளங்களிலும் அவை வந்து விடுகின்றன. லட்சக்கணக்கானோர் திருட்டு இணையதளங்களில் படங்களை பார்த்து விடுவதால் தியேட்டர்களில் வசூல் குறைந்து தயாரிப்பாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ், நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் படங்கள் திரைக்கு வந்த அதே நாளில் திருட்டு இணையதளங்களில் வெளியாகி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள ‘மெர்குரி’ முழு படமும் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் திரைக்கு வருவதற்கு முன்பே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார். இவர் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கி பிரபலமானவர். ரஜினிகாந்தின் புதிய படத்தையும் விரைவில் டைரக்டு செய்ய இருக்கிறார். மெர்குரி படத்தை வசனம் இல்லாத திகில் படமாக உருவாக்கி இருந்தார். ஏற்கனவே அறிவித்தபடி இந்த படம் பிற மாநிலங்களில் வெளியாகிவிட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் திரையிடுவதற்காக மெர்குரி படத்தை நிறுத்தி வைத்து இருந்தனர். ஆனால் படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்