சினிமா செய்திகள்

தாய்லாந்து பறக்கும் விஜய் சேதுபதி

12 Jul 2018

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். இதில் `ஜூங்கா' வருகிற ஜூலை 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் சேதுபதி தற்போது `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்திலும், அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதில் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாகி வந்தது. இந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து மற்றும் மலேசியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். `பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - அருண்குமார் இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்துள்ள `96' படத்தின் டீசர் இன்று ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்