விளையாட்டு செய்திகள்

தாமஸ் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை

14 May 2022

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.  இதில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.


இதனை தொடர்ந்து நேற்று நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரான கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இரட்டையர் பிரிவில் உலக தர வரிசையில் 8வது இடம் வகிக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்ற வெற்றியால் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனால், இந்தியாவின் பிரணாய் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய நிலையில், அவர் உலக தரவரிசையில் 13வது இடம் வகிக்கும் ராஸ்மஸ் கெம்கேவை எதிர்த்து விளையாடினார்.

அவருக்கு போட்டியின் ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்டது.  எனினும், வலியுடன் விளையாடிய பிரணாய், 13-21, 21-9, 21-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மற்றொரு போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள ஜப்பான் அணியை இந்திய அணி சந்திக்கிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam