விளையாட்டு செய்திகள்

தவானின் சதத்தால் 329 ரன்கள் சேர்ப்பு

13 Aug 2017

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக தடை விதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் காயத்தில் சிக்கிய ஹெராத், நுவான் பிரதீப் மற்றும் தனஞ்ஜெயா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக லக்‌ஷன் சன்டகன், லாஹிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ இடம் பிடித்தனர்.

தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ஆடுகளத்தன்மை வேகத்துடன் கூடிய பவுன்சுக்கு உகந்த வகையில் காணப்பப்டது.

இலங்கையின் பந்து வீச்சு தாக்குதலை நேர்த்தியாக சமாளித்த ராகுலும், ஷிகர் தவானும் அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். 28 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ராகுல் தனது 9-வது அரைசதத்தை கடந்தார். தவானும் ரன்வேட்டைக்கு வஞ்சம் வைக்காமல் அதிரடியாக ஆடினார். 17.4 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது. உணவு இடைவேளை வரை இந்த இணையை இலங்கை பவுலர்களால் அசைக்க முடியவில்லை.

ஸ்கோர் 188 ரன்களை எட்டிய போது, லோகேஷ் ராகுல் (85 ரன், 135 பந்து, 8 பவுண்டரி) புஷ்பகுமாரின் சுழலில் இறங்கி வந்து பந்தை தூக்கியடித்த போது அது சரியாக ‘கிளிக்’ ஆகாமல் கருணாரத்னேவின் கையில் போய் விழுந்தது. அடுத்து புஜாரா ஆட வந்தார்.

மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் பவுண்டரி அடித்து தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்தார். செஞ்சுரியை ருசித்த தவான் 119 ரன்களில் (123 பந்து, 17 பவுண்டரி) கேட்ச் ஆகிப்போனார். தொடர்ந்து புஜாரா 8 ரன்னில் சன்டகனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற மேத்யூசிடம் பிடிபட்டார்.

சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி உருவானது. இதன் பின்னர் கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரஹானேவும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். அணி சற்று நிமிர்வது போல் தெரிந்த வேளையில், ரஹானே (17 ரன்) புஷ்பகுமாராவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அவருக்கு பிறகு அஸ்வின் இறங்கினார்.

பெரிய இன்னிங்சை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 42 ரன்கள் (84 பந்து, 3 பவுண்டரி) எடுத்த திருப்தியுடன் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி நடையை கட்டினார்.

83-வது ஓவருக்கு பிறகு புதிய பந்தை எடுத்த இலங்கைக்கு அது உடனடி பலனை தந்தது. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அஸ்வின் 31 ரன்களில் (75 பந்து, ஒரு பவுண்டரி) வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோவின் பந்தில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் சிக்கினார்.

தொடக்க ஜோடிக்கு பிறகு இந்தியாவின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. இறுதி கட்டத்தில் இலங்கையின் பிடிஇறுகியது என்று தான் சொல்ல வேண்டும். கடைசி 27 ஓவர்களில் இந்திய தரப்பில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 329 ரன்கள் சேர்த்துள்ளது. விருத்திமான் சஹா (13 ரன்), ஹர்திக் பாண்ட்யா (1 ரன்) களத்தில் இருக்கிறார்கள். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ்

இந்தியா

 

தவான் (சி) சன்டிமால் (பி)

புஷ்பகுமாரா 119

ராகுல்(சி) கருணாரத்னே (பி)

புஷ்பகுமாரா 85

புஜாரா(சி) மேத்யூஸ் (பி)

சன்டகன் 8

கோலி (சி) கருணாரத்னே (பி)

சன்டகன் 42

ரஹானே (பி) புஷ்பகுமாரா 17

அஸ்வின் (சி) டிக்வெல்லா (பி)

பெர்னாண்டோ 31

சஹா (நாட்-அவுட்) 13

ஹர்திக் பாண்ட்யா(நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 13

மொத்தம் (90 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 329

விக்கெட் வீழ்ச்சி: 1-188, 2-219, 3-229, 4-264, 5-296, 6-322

பந்து வீச்சு விவரம்

விஷ்வா பெர்னாண்டோ 19-2-68-1

குமாரா 15-1-67-0

கருணாரத்னே 5-0-23-0

தில்ருவான் பெரேரா 8-1-36-0

சன்டகன் 25-2-84-2

புஷ்பகுமாரா 18-2-40-3

தொடர்ச்சியாக 7 அரைசதம் அடித்து லோகேஷ் ராகுல் சாதனை

* இந்திய தொடக்க வீரர் 25 வயதான லோகேஷ் ராகுல் 85 ரன்கள் சேகரித்தார்.

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 இன்னிங்சில் அரைசதம் அடித்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடன் 90, 51, 67, 50, 51 ரன்கள் வீதம் எடுத்த ராகுல் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் காயம் காரணமாக விளையாடவில்லை. இன்னிங்ஸ் வெற்றி கிடைத்த கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் 57 ரன்கள் எடுத்த அவர் இந்த டெஸ்டிலும் அரைசதம் கண்டு இருக்கிறார். டெஸ்டில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் விளாசிய முதல் இந்தியர் இவர் தான். ஒட்டுமொத்தத்தில் எவர்டன் வீக்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ஆன்டி பிளவர் (ஜிம்பாப்வே), சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), சங்கக்கரா (இலங்கை), கிறிஸ் ரோஜர்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் டெஸ்ட் இன்னிங்சில் தொடர்ந்து 7 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அந்த சாதனையாளர்களின் வரிசையில் ராகுலும் இணைந்துள்ளார். 2-வது இன்னிங்சில் ராகுல் அரைசதம் அடித்தால் அது புதிய வரலாறாக அமையும்.

* தவானும், ராகுலும் தொடக்க விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தனர். இலங்கை மண்ணில் வெளிநாட்டு தொடக்க ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1993-ம் ஆண்டு கொழும்பில் நடந்த டெஸ்டில் இந்தியாவின் மனோஜ் பிரபாகர், நவ்ஜோத் சித்து இணை முதல் விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 24 ஆண்டு கால அந்த சாதனையை தவான்-ராகுல் கூட்டணி முறியடித்தது.

* ஷிகர் தவான் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான தொடக்க டெஸ்டிலும் சதம் (190 ரன்) அடித்திருந்தார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு மேல் சதம் அடித்த இந்திய தொடக்க வீரர் தவான் தான். கடைசியாக 2011-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ராகுல் டிராவிட் 2 செஞ்சுரி எடுத்திருந்தன


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV