இலங்கை செய்திகள்

தற்போதைய ஜனாதிபதி முறைமை ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலானது - சுமந்திரன்

15 Apr 2019

தற்போதுள்ள ஜனாதிபதி முறைமையானது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என வாக்குறுதி வழங்கிவிட்டே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சில அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டாலும் முழுமையாக அது நீக்கப்படவில்லை.

தற்போதுள்ள ஜனாதிபதி முறைமையானது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும். ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது அதை வெளிப்படையாகக் கண்டோம். எனவே, ஜனநாயகத்தை விரும்பும் – குரல் கொடுக்கும் அனைவரும் இந்த விடயத்தில் ஓரணியில் திரள வேண்டும்.

ஜே.வி.பியால் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவளிக்கப்படும் என நாம் அறிவித்துள்ளோம். இந்தச் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் தேவைப்படாது.

இது தொடர்பாக ஜே.வி.பியுடனும் சிவில் அமைப்புகளுடனும் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சு ஏனைய தரப்புகளுடனும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்