இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கினால் போராட்டத்தை கைவிடுவோம் - அரசியல் கைதிகள்

11 Oct 2018

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக முன்வைக்குமானால் போராட்டத்தை கைவிட தயாரென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்திடம் இவ்விடயத்தை இப்போதே தெரிவித்து, அது தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கவேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்த சிவசக்தி ஆனந்தன் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை அரசாங்கம், நீதித்துறை, ஆணைக்குழுக்கள் என எதிலும் தமக்கு நம்பிக்கையில்லை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்ததாகவும், ஆகவே வழமையை போன்று அரசாங்கத்தற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை இம்முறையும் வழங்கக் கூடாதென்றும் தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 14ஆம் திகதிமுதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த வாரம் முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்