இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் -ரெஜினோல்ட் குரே

08 Nov 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என  வட. மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவிலுள்ள சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இணைந்த அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “வடக்கு, கிழக்கு மக்கள் சுதந்திரத்துக்குப் பின்னரும் பல ஆண்டுகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

எனினும் தமிழ் தலைவர்கள் தமக்கான சுக போகங்களை அனுபவித்து சொகுசாகவே வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

வடக்கில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மாத்திரமே அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பினை ஏற்று தமிழ் மக்களுக்கு சேவை செய்தார்.

அதன் பின்னர் எந்த தமிழ் தலைமைகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவில்லை. இதனால் அந்த மக்களுக்கு வருமானம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றியில் பாதகமான நிலைமையே ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்குச் சென்று மனித உரிமை மீறல் பற்றி பேசுபவர்கள் அந்த மக்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை.

வடக்கு கிழக்கு மக்களை வறுமை நிலைக்குத் தள்ளிய யுத்தத்தை யார் ஆரம்பித்தது என்று அந்த மக்களுக்கு தெரியும். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ தான் யுத்தத்தை நிறைவு செய்து அபிவிருத்திகள் எதுவுமே அற்று கிடந்த வடக்கில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்தார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கில் மஹிந்த ராஜபக்ஷவால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படவில்லை. கடந்த 4 வருடங்களில் இந்த அரசாங்கமும் எதையுமே செய்யவில்லை.

எனவே, இழந்த அபிவிருத்திகளை மீளப் பெறுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்