விளையாட்டு செய்திகள்

தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது

05 Oct 2017

12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு அரங்கேறிய 109-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- உத்தரபிரதேச யோத்தா அணிகள் (பி பிரிவு) மோதின.

விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கத்தில் 9-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தமிழ் தலைவாஸ் அணியினர் அதன் பிறகு வழக்கம் போல் ‘பிடி’யை நழுவ விட்டதுடன், ஆல்-அவுட்டும் ஆகிப்போனார்கள். இதையடுத்து முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் 15-20 என்ற கணக்கில் பின்தங்கியது.

பிற்பாதியில் சாதுர்யமாக ஆடிய உத்தரபிரதேச யோத்தா வீரர்கள் முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டனர். முடிவில் உத்தரபிரதேச யோத்தா 37-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை சாய்த்தது. நட்சத்திர வீரர் நிதின் தோமர், ‘ரைடு’ மூலம் 12 புள்ளிகள் சேகரித்து உத்தரபிரதேச அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.

ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும். இதில் உள்ளூரில் தொடர்ச்சியாக கண்ட 5 தோல்விகளும் அடங்கும்.

அதே சமயம் 19-வது லீக்கில் விளையாடி 7-வது வெற்றியை பதிவு செய்த உத்தரபிரதேச யோத்தா அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

முன்னதாக நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) அரியானா ஸ்டீலர்ஸ் அணி 41-30 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 10-வது வெற்றியை வசப்படுத்தியது. 19-வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இது 9-வது தோல்வியாகும்.

இன்றுடன் (வியாழக்கிழமை) சென்னை சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்சுடன் மல்லுகட்டுகிறது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்