இலங்கை செய்திகள்

தமிழ் ஊடகவியலாளர்கள் மீண்டும் இலக்கு வைக்கப்படுகின்றனர்

11 Dec 2017

“வட கிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் மீண்டும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள்,அச்சுறுத்தல்கள்  இடம்பெறுகின்றன.  இலங்கை அரசு பேசிக்கொண்டிருப்பது போன்று ஊடக சுதந்திரத்தை மேம்படுத்த இச்செயல்கள்  உதவப்போவதில்லை”   இவ்வாறு  யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது..

“சனிக்கிழமை முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம் மற்றும், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளனர்.

குறித்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்த பின்னர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு சென்ற கு.செல்வக்குமார், சு.பாஸ்கரன் த.பிரதீபன், த.வினோஜித், வி.கஜீபன், சி.நிதர்சன், க.ஹம்சனன், க.சபேஸ் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு சிங்கள மயமாவது தொடர்பில் செய்தி மற்றும் ஆவணப்படுத்தல் செய்வதற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர். இதன் போது அவர்கள் தண்ணீர் முறிப்பு பகுதிக்கும் சென்றிருந்தனர்.

இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஊடகவியலாளர்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அவர்களை அங்கு தடுத்து வைத்த இராணுவம் தொடர்ந்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

திட்டமிட்ட வகையில் தேசிய பாதுகாப்பு என்ற பேரில் பேணப்படும் படைமுகாம்கள் குடியேற்றத் திட்டங்களிற்கானதென்பதும், அதனை ஊடகங்கள் வெளிக்கொணரக்கூடாதென்பதையும் இந்த அரசு விரும்புகின்றதென்பது மீண்டுமொரு முறை உறுதியாகியுள்ளது.

இதேவேளை சாவகச்சேரி பகுதியில் வைத்து இலங்கை ஒலிரப்பு கூட்டுத்தாபன ஊடகவியலாளர் எஸ்.மனோகரனும் மற்றும் பொன்னாலை பகுதியில் வைத்து சிரேஸ்ட ஊடக செயற்பாட்டாளர் ந.பொன்ராசாவும் தாக்குதல்களிற்குள்ளாகியுள்ளனர்.அதேபோன்று கிளிநொச்சியினை சேர்ந்த மற்றொரு சிரேஸ்ட ஊடகவியலாளரான சு.பாஸ்கரன் மீதும் மாங்குளம் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றொரு சுயாதீன ஊடகவியலாளரான க.ரவிசாந்த் தனது பணியிடம் சார்ந்து அச்சுறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளார்.

ஒருபுறம் ஊடகவியலாளர் தொழில்சார்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் அவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னால் உள்ளவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படாத போக்கே காணப்படுகின்றது.

ஏற்கனவே யுத்த காலத்தில் வட, கிழக்கு தமிழர் தாயகத்தில் 39 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டோ காணர்மலோ ஆக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை அவர்களிற்கு நீதியை வழங்க மாறி மாறி ஆட்சியிலுள்ளோர் தயாராகவில்லை.

இந்நிலையில் ஊடக சுதந்திரம் திரும்பிவிட்டதாக காண்பிக்க அரசும் அதன் முகவர்களும் பாடுபடுகின்றனர். மீண்டும் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை யாழ்.ஊடக அமையம் மிகவன்மையாக கண்டிக்கின்றது.

இலங்கை அரசு வெறுமனே சொல்லிக்கொண்டிருக்கும் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் பெயரளவிலேயே இருக்கப்போகின்றதாவென்ற கேள்வியையும்  அமையம் முன்வைக்க விரும்புகின்றது” 

இவ்வாறு யாழ். ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV