இந்தியா செய்திகள்

தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் செயல்! வேல்முருகன் கண்டனம்

17 Feb 2017

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக விளைநிலங்களைப் பாலைவனமாக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
 
காவிரி நீர் கிடைக்காமல் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் பாலைவனமாகிவிட்டன. 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். இந்த நிலையில் மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் போன்றவற்றை காவிரி பாசன பகுதிகளில் திணித்து ஒட்டுமொத்த விளைநிலத்தையும் பாழ்படுத்தும் செயலை தொடர்ந்து திணிக்கிறது மத்திய அரசு. 
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் பாறைஎரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடுமையாக எதிர்த்தது. தமிழக அரசும் கடுமையாக எதிர்த்தது. இதனால் மத்திய அரசு பின்வாங்குவதாக அறிவித்தது.
 
ஆனால், இந்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
மீத்தேன், பாறை எரிவாயு, கெயில், நியூட்ரினோ என தமிழகத்தை நாசமாக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எந்த ஒரு பெயரில் நடைமுறைப்படுத்த முயற்சித்தாலும் தமிழகம் ஒட்டுமொத்தமாக கிளர்ந்தெழுந்து இவற்றை தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்