இந்தியா செய்திகள்

தமிழகம் முழுவதும் 132 ஜவுளிக்கடைகளில் வணிக வரித்துறை சோதனை

15 Sep 2021

தமிழக அரசு வணிக வரியை பெருக்குவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்வதை கண்டுபிடித்து, அரசுக்கு வரவேண்டிய முறையான வரியை வசூலித்து வருகிறது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோரின் உத்தரவின் பேரில் நேற்று தமிழகம் முழுவதிலும் சோதனை நடந்தது.

தமிழகத்தில் ஜவுளிக்கடைகள், அவை தொடர்பான நிறுவனங்கள் என 132 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஒரு இடத்தில் தலா 4 பேர் கொண்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அரசுக்கு செலுத்தவேண்டிய வரி சரியாக கட்டப்பட்டுள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஒரே நேரத்தில், 132 இடங்களில் நேற்று மாலையில் தொடங்கிய சோதனை, நள்ளிரவிலும் தொடர்ந்து நீடித்தது. இன்று (புதன்கிழமை) சோதனை தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.96 ஆயிரம் கோடி வணிக வரி மூலம் வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மட்டும் ரூ.36 ஆயிரத்து 261 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு பிரிவாக சோதனை நடத்துவதற்கு வணிக வரித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினம் ஜவுளிக்கடைகள் மற்றும் அதுதொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடைபெற்றிருக்கிறது. இதனைத்தொடர்ந்து மற்ற நிறுவனங்களிலும் சோதனைகளை நடத்துவதற்கு வணிக வரித்துறை திட்டமிட்டுள்ளது.

வணிக வரி முறையாக செலுத்துபவர்களை ஊக்குவிப்பதும், வரி செலுத்தவேண்டியவர்களை வரி செலுத்த வைப்பதற்காகவும் தான் இந்த சோதனை நடத்தப்படுவதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam