இலங்கை செய்திகள்

தன்னுடன் மோதி மாட்டுப்பட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் எச்சரிக்கை

10 Oct 2018

யாரும் தன்னுடன் மோதி மாட்டுப்பட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வட.மாகாண முதாலமைச்சர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் மோதுவது போல என்னுடன் மோதவேண்டாம்.

மரங்கொத்தி பல மரங்களை கொத்திய பிறகு வாழை மரத்தை கொத்தி மாட்டுப்பட்டது போல என்னுடன் மோதி மாட்டுப்பட வேண்டாம். எங்கள் அரசாங்கம் எனக்கு வீட்டு திட்டம் வழங்க அனுமதித்து உள்ளது. அதனை நல்லிணக்க அமைச்சுக்கு கொடுக்க வேண்டாம் என யாரும் தடுக்க முடியாது.

யாருக்கு எதனைக் கொடுப்பது என்பதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தீர்மானிப்பார்கள். மற்றவர்கள் அது பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கடந்த மூன்று வருடங்களாக வீட்டுத் திட்டம் தாமதம் ஆகும் போது அரசாங்கத்தில் இருந்தவர்களும் எதிர்க்கட்சியில் இருந்தவர்களும் அப்போது தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.

தற்போது எனக்கு வீட்டுத் திட்டம் வழங்க அரசாங்கம் அனுமதித்தவுடன் தான் பலர் கண் விழித்து உள்ளனர். கடந்த வாரத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிடம் வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் வீட்டுத்திட்டம் தாமதம் ஆக நான் காரணமில்லை எனக்கு வீட்டுத்திட்டம் வழங்க அனுமதி கிடைத்தது எட்டாவது மாதத்தில் தான் தற்போது இரண்டு மாதம் தான் ஆகியுள்ளது.

இந்நிலையில் என்னைத் திட்டுவது ஏற்புடையது அல்ல. என்னைத் திட்ட வேண்டும் என்றால் வேறு காரணங்கள் கூறி திட்டுங்கள். வீட்டுத்திட்டம் தாமதம் என கூறி திட்டாதீர்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பதிலடி வழங்கும் வகையிலேயே மனோ கணேசன் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்