உலகம் செய்திகள்

தந்தையான ஒரே வாரத்தில் தாத்தாவான இளைஞர்

11 Jul 2018

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாமி கோனொலி (23) கல்லூரி படித்து வரும் இளைஞர்.  தடகள வீரரான இவர் தினமும் காலையும், மாலையும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனது படிப்பிற்காக பகுதி நேரமாக டாமி வேலைக்கு சென்று வந்தார். இவரது காதலியும் ஒருபுறம் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிய டாமி, கல்லூரி படிப்பை விடுத்து முழு நேரமாக வேலைக்கு செல்ல தொடங்கினார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டாமியின் காதலி குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த தகவலை தெரிவிக்க டாமி தனது பேஸ்புக் பக்கத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித தொடர்புமின்றி இருந்த டாமியின் தங்கை ஏஞ்சலா தகவல் ஒன்று  அனுப்பியிருந்தார்.அதன் பின்னர், ஆச்சரியத்துடன் தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை தனது தங்கையிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால், ஏஞ்சலாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், ஏஞ்சலா பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை வைத்து டாமி அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்துவிட்டார் அப்போது ஏஞ்சலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், அவருக்கு தங்குவதற்கு வீடு இல்லாமல் சாலையோரத்தில் சிறிய தடுப்பு போட்டு தங்கியிருந்தார் ஏஞ்சலா.

இதனைப் பார்த்த டாமி அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர், அவரிடம் டாமி விசாரித்ததில் ஏஞ்சலாவின் காதலன் சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை சமாதானப்படுத்திய டாமி தன்னுடன் ஏஞ்சலாவை அழைத்துச் சென்றார். ஆனால், ஏஞ்சலாவின் காதலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தான் டாமி, சட்டப்படி ஏஞ்சலாவை தனது மகளாக தத்தெடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே ஏஞ்சலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம், தந்தையான ஒரே வாரத்தில் டாமி தாத்தாவானார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

 ‘நான் செய்தது மனப்பூர்வமான ஓர் விஷயம் தான். அதில் எந்த தடுமாற்றமும் எனக்கு இல்லை. ஆனால், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பலரும் என்னை ஏதோ வித்தியாசமாக பார்க்கிறார்கள். திடீரென்று பலருடைய கவனமும் எங்கள் மேல் விழுகிறது. அது தான் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. இது ஒன்றும் விசித்திரமான நிகழ்வு கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களைப் போல ஏராளமான மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

ஒரு தந்தையாக எனது கடமைகள் குறித்தான ஒரு கற்பனை என்னிடத்தில் இருந்தது. இப்போது இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தையின் அப்பா இன்னொரு குழந்தையின் தாத்தா. நினைக்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலா கூறுகையில், ‘எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்த அரவணைப்பை எப்போதும் நான் மறக்க மாட்டேன். நான் டாமியுடன் செல்கிறேன் என்று சொன்னபோது சிலர், அவன் உன்னிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு உன்னை துரத்தி விடுவான் என்றார்கள். ஆனால், எனக்கு டாமியை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு இவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை கொடுத்ததுடன், குறைகளுடன் ஏற்றுக் கொண்ட டாமிக்கும் அவனின் மனைவிக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்