இந்தியா செய்திகள்

தங்கம் விலை ரூ.29 ஆயிரத்தை தாண்டியது

14 Aug 2019

தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக அதன் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கட்டுக்கடங்காமல் விலை உயருகிறது. கடந்த 2-ந் தேதி கிராமுக்கு ரூ.73-ம், பவுனுக்கு ரூ.584-ம் அதிகரித்தது. அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-க்கு விற்பனை ஆனது.


அதன்பின்னரும், தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கியே பயணித்தது. கடந்த 7-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.28 ஆயிரத்தை கடந்தது.

இந்தநிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.24-ம், பவுனுக்கு ரூ.192-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 627-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 16-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கடந்த 12 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.317-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 536-ம் உயர்ந்து இருக்கிறது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் 40 காசும், கிலோவுக்கு ரூ.1,400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.49-க்கும், ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

தங்கம் தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்வதற்கான காரணம் குறித்து, மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறும்போது, ‘சீனா, ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி தங்கத்தை அதிகளவில் வாங்க தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை அதிகரிக்கும். விலை குறைவதற்கான வாய்ப்பு இப்போது இல்லை. இன்னும் சில நாட்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தொட்டுவிடும்’ என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்