இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் -சம்பிக்க

10 Aug 2018

ஆறு வருட கடூழிய சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமென மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஞானசார தேரர் விடயத்தில் ஜனாதிபதி என்ன முடிவினை எடுத்துள்ளார் என்பது தொடர்பாக தன்னால் எதனையும் கூற முடியாதெனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஞானசார தேரரை பழி வாங்குவதற்காகவே அவருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதென பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் எவ்வளவோ பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவைகளை கவனத்தில் கொள்ளாது ஞானசார தேரர் தொடர்பில் மாத்திரம் அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்