இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளரிடம் பேரம் பேசாமல் கூட்டமைப்பு ஆதரவளிக்கக்கூடாது - சிவசக்தி ஆனந்தன்

14 Aug 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்தவிதமான பேரம் பேசுதலுமின்றி ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினால், நிச்சயமாக பொதுத் தேர்தலில் தமிழர்கள் கூட்டமைப்பை நிராகரிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாசவோதான் களமிறங்கவுள்ளனர். இவர்களைத்தான் கூட்டமைப்பினர் ஆதரிக்க போகின்றனர்.

ஏற்கனவே அவர்களுக்கு ஆதரவு வழங்கி மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

எனவே, கடந்த தேர்தலைப் போன்று தனிப்பட்ட நலனுக்காக கூட்டமைப்பினர் பேரம் பேசினால், நிச்சயமாக பொதுத் தேர்தலில் தமிழர்கள் கூட்டமைப்பை நிராகரிப்பார்கள்.

எனவே ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை கூட்டமைப்பினர் ஆதரிப்பார்களாகவிருந்தால், தமிழ் மக்களின் நிரந்தரமான அரசியல் தீர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரிடம் மட்டுமன்றி சர்வதேச இராஜதந்திரிகளிடமும் உறுதி மொழியைப் பெற்றே ஆதரவளிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்