இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய களமிறங்குவதை அமெரிக்கா விரும்பிவில்லை

12 Jun 2018

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்படக் கூடாது என்றும், அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்றுமுன்தினம் இரவு மகிந்த ராஜபக்ஷவை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போதே, மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் வெளிப்படையாக கூறினார் என்று அறியப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஸ இரட்டை குடியுரிமை கொண்டவர். அந்த வகையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ களமிறங்குவது என்பது சற்று குழப்பமான விடயமாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை, அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்காது.

அவருக்கு எதிராக சுமத்தப்படும், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்பளிக்கப்படும் வரை கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதை தடுக்கும் நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கும் என்று விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜனநாயக அரசியலுக்குப் பொருத்தமான- அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற தொனியில், அவர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்