இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவார்களேயானால் என்ன நடக்கும்?

14 Aug 2019

ஜனாதிபதி தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவார்களேயானால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை வெற்றிபெறும் வேட்பாளர் பெற்றுக்கொள்ளுவது அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செல்லுபடியாகும் வாக்குகளிலிருந்து ஐம்பது வீதத்தை ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு 50 வீத வாக்குகளை எவரும் பெறமுடியாத விடத்து அதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

வேட்பாளர்கள் எவரும் 50 வீதம் வாக்குகளைப் பெறாதவிடத்து, மீண்டும் தேர்தல் நடாத்தி வாக்களிப்புக்கான அவசியம் கிடையாது. மூன்று வேட்பாளர் அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே செல்லுப்படியாகும் வாக்குகளிலிருந்து 50 வீதத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்காளர்கள் தமது விருப்பப்படி விருப்பு வாக்குகளை வேட்பாளருக்கு 1, 2, 3 என்ற இலக்கத்தை பிரயோகித்து விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விருப்பு வாக்கு அளிக்க வேண்டுமானால் 1 என்ற இலக்கத்தை மட்டும் பிரயோகிக்க முடியும் அல்லது வழமை போன்று (X) எதிரே வாக்களிக்க முடியும். A, B, C, D, E என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டால் அனைத்து செல்லுப்படியான வாக்குகளில் நூறு என நாம் கிரகித்துக் கொண்டால், அதன் போது அந்த வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளை A = 40, B = 35, C = 15, D = 6, E = 4 என இந்த முறைப்படியே தெரிவு செய்யப்பட்டால், A மற்றும் B முதல் இரண்டு பேராவார்கள். ஏனைய C, D, E ஆகியோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

முதல் இரு இடங்களைப் பெற்றுக் கொள்ளும் A மற்றும் B ஆகியோரின் வாக்குச் சீட்டில் புள்ளடியிடப்பட்டுள்ள விருப்பு வாக்கு தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்